Saturday, October 2, 2010

எந்திரன் திரை விமர்சனம் -ENDHIRAN(ROBOT) Movie Review

இந்த விமர்சனத்தில் எந்திரன் கதை பற்றி கூறவில்லை, அதனால், தைரியமாக படித்துவிட்டு, சுவாரஸ்யம் குறையாமல் திரை அரங்கு சென்று படத்தை பார்க்கலாம்.

சமீபத்தில் வெளிவந்த.. தமிழ் படங்களில், கந்தசாமி ஆகட்டும், ராவணன் ஆகட்டும், ஆயிரத்தில் ஒருவன் ஆகட்டும், பெரிய அளவில் பேசப்பட்டு வெளிவந்து, பெரிய அடிபட்டு திரை அரங்கை விட்டு வெளியே விரட்டப்பட்டது.
எதுவுமே, ரசிகர்களின் எதிர்பார்ப்பு பசிக்கு தீனி போட முடியாமல், பாக்ஸ் ஆபிசில் கல்லா நிரப்பவில்லை.
ஆனால், அப்படிப்பட்ட படங்களின் மத்தியில் , ரசிகர்களின் எதிர்பார்ப்பை, கொஞ்சமும் சங்க வைக்காமல், ஒரு (ஹாலிவுட் என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால் ஹாலிவுட் மட்டுமே உலக சினிமா அல்ல) உலக சினிமாவை கொடுத்து இருக்கிறார் ஷங்கர்.
கடந்தமுறை இதே ப்ளாகில் நான் இன்செப்சன் பட திரை விமர்சனம் எழுதிய போது என்ன மன நிலையில் இருந்தேனோ, அதே போல ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியில் எழுதுகிறேன்.
இந்த படம் இன்செப்சன் மற்றும் என்னை கவர்ந்த மற்ற ஹாலிவுட் திரைப்படங்களை தாண்டி, என்னை பாதிக்கும் ஒரு படம். அதற்கு இரண்டு காரணங்கள் , ஒன்று இது என் தமிழ்மொழி திரைப்படம்.. இன்னொன்று எங்கள் சூப்பர் ஸ்டார் நடித்த படம்.


ரஜினி
படத்தில் ஒருகாட்சியில் கூட நீங்கள் ரஜினியை பார்க்காமல் இருக்க முடியாது. ஏன், ஒரு ரஜினி மட்டும் அல்ல, இரண்டு ரஜினிக்கு மேலும் சில காட்சியில் காண்பீர்கள்.
இது வரை ரஜினிக்கு நடிக்க தெரியாது, வெறும் ஸ்டைல் மட்டும் தான் என்று நினைப்பவரா நீங்கள்? இந்த படம் பார்த்து விட்டு அந்த என்னத்தை மாற்றிக்கொள்வீர்கள். மிக மிக நீண்ட நாட்களுக்கு பிறகு, பரட்டை, நெற்றிக்கண் வில்லன் ரஜினியை காணலாம். மனுஷனுக்கு 60 வயசுக்கு மேல் என்றால் நம்ப முடியவில்லை. பின்னி பெடல் எடுக்கிறார். முக்கியமாக, அந்த "பே.." கருப்பு ஆடு கண்டு பிடிக்கும் சீன், படம் பாருங்க அப்போதான் புரியும்.
அதே சமயம் விஞ்ஞானி ரஜினி, ரோபோ ரஜினி இரண்டிற்கும் வேறுபட்ட நடிப்பில் நாம் இது நிஜமாகவே ரெண்டு ரஜினி தான் என்று நினைக்க தோன்றும். படம் பார்த்து முடித்து விட்டு வரும் யாரை வேண்டுமானாலும் நீங்கள் கேட்டு பாருங்கள், உங்களுக்கு விஞ்ஞானி ரஜினி பிடித்ததா இல்லை ரோபோ ரஜினி பிடித்தா? என்று, "விஞ்ஞானி ரஜினி அப்படி ஒன்னும் இல்லை சார், ரோபோ ரஜினி தான் சூப்பர்" என்று பட்டுன்னு சொல்வார்கள் . அந்த அளவுக்கு ரோபோ ரஜினி கவர்கிறார். பாடல் காட்சிகளில் கூட ரஜினி ரொம்ப ஸ்மார்டாக இருக்கிறார். கொஞ்சம் நடனம் கூட செய்கிறார். இது வரை நாம் பார்க்காத ரஜினி டான்ஸ். சில இடங்களில் கிராபிசில் ஆட வைத்தாலும் கூட ரசிக்கும்படியாகவே உள்ளது.

ஷங்கர்,
தன்னுடைய கனவு திரைப்படம் என்று பார்த்து பார்த்து வேலை செய்த உழைப்பு நிச்சயம் தெரிகிறது. ஏற்கெனவே இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று சொல்லப்படும் பெயர்களில் ஷங்கர் என்னும் பெயரை இன்னும் அழுத்தமாக உச்சரிக்கும் படி செய்து விட்டார்.. யார் யாரோ, நான் வித்தியாசமான திரைப்படம் எடுக்கிறேன் என்று சொல்லி மகா மெகா சொதப்பல் செய்து கொண்டு இருக்கும் இந்த வேலையில், ஷங்கர் தன் மார் தட்டி நான் வித்தியாசமான படம் எடுத்தேன் என்று சொல்லிகொள்ளலாம். அந்நியன், பாய்ஸ் திரைபடத்தில் மிஸ் ஆனா இந்தியன், ஜென்டில்மேன் ஷங்கர் இந்த படத்தில் மீண்டும் ப்ரெசென்ட். என்னதான் வெளி நாடு சென்று எல்லோரும் பாடல் காட்சியை படம் பிடித்து வந்தாலும், ஷங்கர் எடுத்தால் அது ஒரு தனி பிரம்மாண்டம் தான். காதல் அணுக்கள், கிளிமஞ்சாரோ பாடல்களில் வரும் இடங்கள், கொள்ளை அழகு மற்றும் பிரம்மாண்டம். இரும்பிலே பாடல் ஸ்டுடியோவிலும், கிராபிக்சிலும் எடுத்ததால், பிரம்மாண்டம் கொஞ்சம் குறைவது போல் தெரிகிறது. ஆயிரம் ரஜினி வரும் அரிமா அரிமா பாடல் கொஞ்சம் வாய் பிளக்க தான் செய்கிறது.
ஆனால், என்னதான் ஷங்கர் கதையாக இருந்தாலும், சுஜாதா என்னும் ஒரு நிஜ விஞ்ஞானி இல்லை என்றால் அந்த டெக்னிகல் விஷயங்கள் இவ்வளவு நுணுக்கமாக ஷங்கரால் செய்து இருக்க முடியாது தான், என்று நம்மை நினைக்க தோன்றுகிறது. கடவுள் இருகிறாரா? என்று கேட்கப்படும் காட்சியிலும், பிரசவ காட்சியிலும் நம்மை கொஞ்சம் சிலிர்க்கத்தான் வைக்கிறார்கள்.

ஏ.ஆர்,ரஹ்மான்.
பாடல்களில் ஏற்கெனெவே அவர் யார் என்று நமக்கு காண்பித்து விட்டார். பின்னணி இசையை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? இசை தட்டுகளில் வராத பிட்டு இசைகள் படத்தில் நிறைய. குறிப்பாக அந்த கார் சண்டை காட்சியில் வரும் ஒரு பின்னணி இசை அற்புதம். சீக்கிரம் இணையத்தில் ஒரு சுற்று வரும், அந்த பிட்டு மியுசிக். மேலும் படம் முடியும் தருவாயில் கவனித்து பார்த்தல் தெரியும், சிம்பொனி இசை. ஆஸ்காரை சும்மாவா குடுத்தார்கள்.

ஐஸ்வர்யா ராய்,
கதைக்கு தேவையான கதாபாத்திரம் தான். இயந்திர மனிதனே மயங்கி காதலிக்கும் ஒரு கதா பாத்திரத்தில், இவரை தவிர வேறு யாரையாவது போட்டு இருந்தால், செம்ம காமெடி ஆகி இருக்கும். நீண்ட நாட்களாக சொல்லிக்கொண்டு இருந்து கடைசியாக , நம்ம சூப்பர் ஸ்டாரும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்து விட்டார்கள். இரண்டு பேரும் திரையில் ஜோடி பொருத்தம் கண கச்சிதம், இந்த கெமிஸ்ட்ரி என்பார்களே அது நிறைய...(சாரி அபிஷேக் பச்சன்)

படத்தில் மேலும் சொல்லும் படியான ஆட்கள், ஒளிபதிவாளர் ரத்தினவேலு, கலை இயக்குனர் சாபு சிரில்(படத்தில் ஒரு காட்சியில் கூட வருகிறார்), ரேசூல் பூக்குட்டி, பீட்டர் ஹைன். இன்னும் நிறைய.

முக்கியமாக, டப்பு குடுத்த கலாநிதி மாறன். இவர் இல்லை என்றால் இப்படி ஒரு பிரமாண்டம் தமிழ் சினிமாவில் நாம் கண்டு இருக்கவே முடியாது.

படத்தை ஒவ்வொரு முறையும் இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் பார்த்தால் கூட தப்பில்லை. அந்த அளவுக்கு அவர்கள் வியர்வை படம் முழுக்க காட்சிகளாய்.

சில பேர் படம் பார்த்து விட்டு,
படம் அப்படி ஒன்றும் இல்லை,
காதுல ரொம்ப பூ சுத்துறாங்க,
அல்லது ரொம்ப சிம்பிளா, படம் வேஸ்ட்.
அப்படி சொன்னார்கள் என்றால், அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி,
இதே படத்தை, ஒரு அர்னால்டோ, வில் ஸ்மித்தோ, அல்லது ஒரு லியோனர்டாவோ நடித்து இருந்தால் இப்படி சொல்வீர்களா?
இது நம்ம படம் பாஸ். நம்ம தமிழ்மொழிப்படம் பாராட்டுங்க!


சில கிராபிக்ஸ் சொதப்பல்கள், இரண்டாம் பாதியில் ஓவர் டோஸாக இருக்கும் சண்டை காட்சிகள் என்று சில சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்.
எந்திரன் நிச்சயம் ஆஸ்கார், மற்றும் உலக சினிமா விருதுகள் கதவை தட்டும்.