Thursday, September 16, 2010

கொமரம் புலி(தெலுங்கு) திரை விமர்சனம் : Komaram Puli Movie Review

நான் சாதரணமாக தெலுங்கு படங்களை பார்ப்பதுண்டு. அதிலும் முக்கியமாக சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் திரைப்படங்களை காண்பேன்.
சொல்லபோனால் அல்லு அர்ஜுனும், மகேஷ் பாபுவும் வந்த பிறகு தான் தெலுங்கு சினிமாவில், சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது.
நான் கடைசியாக ரசித்த படம் மகதீரா. பெரிய பொருட்செலவில், நல்ல திரைக்கதை அமைப்போடு வந்த திரைப்படம். ஆந்திராவில் பல வசூல் சாதனை படைத்தது.
இப்போது , நண்பருடன் கொமரம் புலி படத்தை பார்த்தேன்.
நமது எஸ்.ஜெ.சூர்யா இயக்கத்தில், நம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, சிரஞ்சீவி தம்பி பவன் கல்யான் நடித்த படம்.

கதை என்னவோ , நாம் தமிழ் சினிமாவில் பார்த்து புளித்து போன கதைதான் , ஹீரோவின் தந்தை நேர்மையான போலீஸ், வில்லனால் கொலை செய்ய படுகிறார், தாய் வைராக்யத்துடன் தன் மகனை பெற்று, வளர்த்து, போலீஸ் ஆக்குகிறார். வழக்கம் போல ஹீரோவும் ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசர். முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டி போல, இதில் புகார் டெலிபோன் பூத் வைத்து மக்கள் குறைகளை போக்குகிறார். ஒரு வழியாக வில்லன் குறுக்கில் வர , நிறைய மோதி, கடைசியாக, புதிய பலி, பழைய பலி எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு முடிவுக்கு வந்து, சுபம் கார்ட் போடுகிறார்கள்.

படம் முழுக்க தும்மல் வரும் அளவுக்கு மசாலா தூக்கலாக தான் இருக்கிறது. என்ன பண்ணுவது அது தெலுங்கு படத்துக்கே உரித்தான ஒரு பாணி. தெலுங்கு மக்கள் என்னவோ மாறிட்டாங்க தான் , அங்கே படம் எடுப்பவர்கள் தான் இன்னும் அதே பாணியில் படம் எடுத்து கொல்லுகிறார்கள்.

திரைக்கதை என்னவோ ஆங்காங்கே நன்றாக போனாலும், பல இடங்களில் சறுக்குகிறது. முக்கியமாக நம்ம எஸ்.ஜெ.சூர்யாவின் டிரெட்மார்க் சில்மிஷ காட்சிகள் ரெண்டு மூணு வருகிறது(அதில் ஒரு காட்சி நம்ம "அ ஆ" படத்தில் வரும் காட்சியின் ரீமேக்) , அது வரும் போதெல்லாம் தியேட்டரில் மக்கள் முகம் சுளிக்கவே செய்கிறார்கள். அதே போல எஸ்.ஜெ.சூர்யா சில நாட்கள் படம் ஏதும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து ஆங்கில படங்களை பார்த்து இருப்பார் போல இருக்கு, அதை அப்படியே இந்த படத்தில் காப்பி அடித்து போட்டு இருக்கிறார் .
உதாரணதுக்கு, ஹீரோவின் தாய் சரண்யா கிணற்றில் குழந்தை பெற்றுக்கொள்ளும் காட்சி அப்படியே மெல் கிப்சனின் அபோகேளிப்டோ (Apocalypto) படித்தில் வரும் காட்சியின் அப்பட்டமான காப்பி.
மேலும் ஹீரோ அறிமுக காட்சியில் வரும் சண்டை காட்சி, எதோ லோ பட்ஜெட் சைனீஸ் படத்தில் பார்த்தது போன்ற ஞாபகம். இது போல படத்தில் நிறைய காட்சிகள் உள்ளன.

பவன் கல்யான் கச்சிதமாக நடித்து இருக்கிறார் . ரொம்ப சிரத்தை எடுத்து நடித்து இருபது கண்கூடாக தெரியும். ஆனா என்ன, நிறைய இடங்கள்ள நம்ம எஸ்.ஜெ.சூர்யா பேசுற மாறியே இருக்கும். அது முற்றிலும் இயக்குனரின் வேலைதான் . பொதுவாக எல்லா எஸ்.ஜெ.சூர்யா படங்களில் , ஹீரோவை அவரை மாறி தான் பேசவைப்பார்.

ஹீரோயின் நிகிஷா பட்டேல், புது முகம், பயங்கர அழகு. லேசாக நடிக்கவும் செய்கிறார் . தமிழுக்கு வந்தால் ஒரு ரவுண்டு வரலாம். காத்திருப்போம்!

ஹீரோவின் அம்மாவாக நம்ம சரண்யா, இப்போது வரும் படங்களில் எல்லாம் அம்மா கேரக்டர்ணா இவங்களை தான் போடுறாங்க. அதே போல தன் வேலையை கச்சிதமாக செய்கிறார். படத்தில் பாராட்டுற அளவுக்கு நடித்தவர்னு சொல்ல போனா அது சரண்யா மட்டும் தான்.

நாசர், போலீசா வரார். சுத்தமா வேஸ்ட் பண்ணி இருக்காங்க.
வில்லன் மனோஜ் பாஜ்பாய், மிரட்டலா இல்லைனாலும், கரக்டா நடிச்சு இருக்கார்.
இது தவிர, ஸ்ரேயா ஒரு பாடலுக்கு, சரண்ராஜ், மற்ற எல்லாரும் எதுக்கு வராங்கன்னே தெரில.

இசை நம்ம ஆஸ்கார் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜெ.சூர்யா ரொம்ப தொல்லை பண்ணி இருப்பார் போல, பாடல்களை ஏனோதானோன்னு தான் போட்டு இருக்கார். பின்னணி இசை பரவாயில்லை.

இந்த படத்தை நான் முக்கியமாக பார்த்த காரணம், நம்ம விஜய் இந்த கதையில் நடிக்க வேண்டி இருந்தது. கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார். விஜய் வேண்டாம் என்று சொல்லி, சுமாராக ஓடிய படங்கள் என்று பார்த்தால் அநேகமாக இது ஒன்றாக தான் இருக்கும். சிங்கம் படத்தை கூட விஜய் வேண்டாம் என்று தான் சொன்னாராம். கடைசியில் சூர்யா நடித்து, படம் ஓஹோவென ஓடி தீர்தது. சரி, விஜய் பற்றி வேற எப்பவாச்சும் பேசலாம்.
தெலுங்கில் வெற்றி பெற்றால் எஸ்.ஜெ.சூர்யா மீண்டும் தமிழில் வேறு ஹீரோவை வைத்து எடுப்பதாக இருந்தாராம். படம் சரியாக போகாததால், அநேகமாக அந்த என்னத்தை டிராப் செய்து இருப்பார்.

ஆண்டவன் புண்ணியத்தில், ஆந்திராவில் படம் ஒரு அளவுக்கு சுமார ஓடிட்டா பரவாயில்லை, இல்லேன்னா, எஸ்.ஜெ.சூர்யா படம் இயக்குவதை விட்டுட்டு, மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவரும் அபாயம் இருக்கிறது. உஷார்!

Monday, September 13, 2010

பாஸ் (எ) பாஸ்கரன் திரை விமர்சனம் - Boss (a) Baskaran Movie Review

களவாணி, நான் சமீப காலத்தில் ரசித்து பார்த்த அற்புதமான திரைப்படம். திரைக்கதை எள் அளவும் சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த திரைப்படம் பற்றி விமர்சனம் எழுத நினைத்து, பிறகு மிகவும் கால தாமதம் ஆனதால், இதற்கு அப்புறம் எழுதினால் ரொம்ப பழைய விமர்சனம் ஆகி விடும் என்ற காரணத்தால் அப்படியே கைவிட்டுவிட்டேன்.

களவானிக்கு பிறகு, நான் ரசித்து பார்த்த படம் பாஸ் (எ) பாஸ்கரன்.
இந்த படமும் படம் பார்ப்பவர்களை சற்றும் போர் அடிக்காமல், முழு நக்கல் நய்யாண்டி வசனங்களோடு எடுத்த படம். சந்தானம், இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு, படம் முழுக்க, ஹீரோ ஆர்யாவுடனே பயணிக்கும் ஒரு கதாபாத்திரம். ஆகவே இது சந்தானத்தை மட்டுமே நம்பி பின்னப்பட்ட திரைக்கதை.

கதை ரொம்ப சாதாரணம் தான்,
ஹீரோ ஆர்யா , யார் பேச்சும் கேட்காமல், அரியர்ஸ் வைத்துக்கொண்டு ஊர் சுற்றும் பையன். பார்த்தவுடன் நயன்தாராவுடன் காதல். தன் திருமணம் பற்றி பேச போக, வெட்டியாக சுத்துவதை மற்றவர்கள் சுட்டி காட்ட, சபதம் ஏற்று, வீட்டை விட்டு வெளியே வருகிறார், திரும்பவும் தன் சபதத்தில் ஜெயித்தாரா என்பது தான் மீதி கதை.
திரைக்கதை தான் இந்த படத்தின் முதுகெலும்பே, அது மட்டும் இல்லை என்றால், இது மற்ற படங்களை போல படு மொக்கையாக போய் இருக்கும்.

மிக நீண்ட நாட்கள் பிறகு ஆர்யா ஒரு ஜாலியான கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். அதில் பக்காவாக ஸ்கோர் செய்கிறார்.

நயன்தாரா பாவம், ஏதோ நோய் போல, மிகவும் பரிதாபமாக காட்சி அளிக்கிறார். அய்யா, வல்லவன் போன்ற படங்களில் நாம் பார்த்த அழகு கொலு கொலு நயன் இனி நாம் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார் போல இருக்கு. கன்னம் ஒட்டி, புருவம் வரைந்து எதோ எயிட்ஸ் நோயாளி போல் காட்சி அளிக்கிறார். முன்பு தன் அழகால் நம் தூக்கத்தை கெடுத்த நயன், இன்று தன் பயானக முகத்தால் தூக்கத்தை கெடுக்கிறார்.

சந்தானம், இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவர் வரும் எல்லா காட்சியிலும் அரங்கம் அதிர்கிறது. முன்பு, கவுண்டமணி சாயலில் நடிப்பார் என்ற குற்றச்சாட்டு இருக்கும், இந்த படத்தில் அது துளியும் இல்லை. முழுக்க முழக்க இது சந்தானம் நடிப்பு என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் நல்ல தேர்ச்சி. தொன்னூறுகளில், கவுண்டமணியை நம்பியே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு ஓடின, இது போல ஒரு வாய்ப்பு இனி சந்தானத்துக்கும் அமையும். இனி வரும் படங்களில் நிச்சயம், சந்தானம் ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக இருப்பார்.

ஆர்யாவின் அண்ணனாக வரும் பஞ்சு அருணாச்சலத்தின் மகன், நல்ல நடிப்பை காட்டுகிறார். இனி தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு நல்ல அண்ணன் கிடைத்துவிட்டார்.

ஆர்யாவின் அண்ணியாக வரும் விஜயலட்சுமி(பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வரும் நாயகி), இன்னும் அழகாக தான் இருக்கிறார், சொல்ல போனால் நயன்தாராவை விட திரையில் அழகாக தெரிகிறார். அண்ணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து இருக்கிறார்.

இது தவிர ஜீவா கௌரவ தோற்றத்தில் வந்து பின்னி பெடல் எடுக்கிறார். ஐந்தே நிமிடங்கள் வந்து ஒரு கலக்கு கலக்கி படத்தை முடிக்கிறார். நான் மிகவும் ரசித்த காட்சியில் ஒன்று "அங்கிள் அங்கிள், அப்பா கிட்ட சொல்லாதீங்க அங்கிள்". படம் பாருங்க அப்பொழுதான் அந்த காட்சியின் கலாட்டா உங்களுக்கு புரியும்.

படம் முழுக்க உள்ள நிறைய வசனங்கள் காலேஜ் யுத்களின் பேச்சுக்களில் சீக்கிரம் காண முடியும்.
"நண்பேண்டா" ஏற்கெனவே எஸ்.எம்.எஸ் களில் பறந்து கொண்டு இருக்கிறது.
மேலும், அந்த வெற்றி குறி மேட்டரும் ரொம்ப பிரபலம்.
எனவே இது முழுக்க முழுக்க இளசுகளுக்காகவே.

இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் சற்று மெதுவாக செல்வது போல் இருக்கும், ஆனால் அது மற்ற விறுவிறுப்பு காட்சிகளின் பாதிப்பு என்று தான் சொல்லணும். ஆங்காங்கே ரெட்டை அர்த்த வசனங்கள், அதை சிறிது குறைத்து இருக்கலாம்.
எஸ்.எம்.எஸ் வெற்றிக்கு பிறகு, மீண்டும் ஒரு வெற்றி படம் எடுத்து உள்ளார் இயக்குனர் ராஜேஷ்.
ராஜேஷ், என் சொந்த ஊர் சேலத்தை சேர்ந்தவர் என்று நண்பர் சொன்னார். அப்படி இருந்தால் இன்னும் பெருமை. திரைக்கதையில், நிச்சயம் நன்றாக கொண்டு செல்லும் திறமை இருக்கிறது, அதே போல, கனமான கதையிலும் கவனம் செலுத்தினால், ராஜேஷை இன்னொரு பாக்யராஜ் என்று திரை உலகம் கொண்டாடும்.

ஆகா மொத்தம், பாஸ் (எ) பாஸ்கரன், காலேஜ் இளசுகள், நண்பர் கூட்டத்தோடு சென்று, கத்தி கலாட்ட செய்து பார்க்க வேண்டிய படம்.

Friday, September 10, 2010

இது ஆட்டோவா? இல்லை காரா?

சமீப காலமாக, சென்னை சாலையில நான் சில வித்யாசமான வாகனங்களை பார்க்கிறேன். அதிலும் சென்னையில் ஓடும், சில ஷேர் ஆட்டோக்கள் ரொம்பவே வித்யாசமாக தான் இருக்கிறது.
அதில் ஒன்று தான் இது.

நான் அண்ணா நகர் நூறு அடி சாலையில் பார்த்த வண்டி.
பின்னால் இருந்து பார்த்தால் ஒரு நிமிடம் அது கார் என்றே நினைக்க தோன்றும், கொஞ்சம் நெருங்கி வேறு கோணத்தில் இருந்து பார்த்தல் தான் அது ஒரு ஆட்டோ என்று தெரியும்.
கொஞ்சம் மப்புல பாத்தா , "என்னடா இது, காருக்கும், ஆட்டோவுக்கும் கூடவா கள்ள உறவு நடக்குது ? அட பாவிகளா?" அப்படீன்னு கன்பீஸ் ஆயிரும்.
நிச்சயம் இதை வடிவமைத்தவர் மற்றவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி காண்பிக்க கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கிறார் என்பது போல் தான் தெரிகிறது.
போற போக்க பாத்தா நம்ம ஆளுங்க, ஏரோபிளேன் கூட டிசைன் பண்ணிருவாங்க போல இருக்கே??!

Wednesday, September 8, 2010

எனது முத்திரை

முத்திரை! எனக்கென்று ஒன்று உருவாக்க ரொம்ப நாள் ஆசை. குறிப்பாக வலைப்பூவில் இங்கு நான் இடும் இடுகைக்காக. மேலும் ஆங்கிலத்திலும் ஒரு வலைபூ எனக்குள்ளது.
எதுக்கு இந்த முத்திரை? என்றால், பொதுவாக நம்மை வேறு வலைப்பூவில் இருந்து வேறுபடுத்தி காண்பிக்க. உதாரணம் ஒரு புகைப்படம் இங்கு போஸ்ட் செய்தேன் என்றால் அதில் என் முத்திரை அச்சு இருந்தால் வேறு யாரும் எளிதில் உபயோகிக்க முடியாது அல்லவா.. அதனால்!
காபிரைட் மிக முக்கியம் அமைச்சரே.. ;)

இந்த லோகோ வடிவம் என்னவென்றால், எனது பெயர் முதல் எழுத்து, "L" தெரியும், அடுத்து எண் "8 " தெரியும், எனது பிறந்த எண் மற்றும் ராசி எண்.

இது எல்லாமே ஒரு விளம்பரம் தான்.. ஹீ.. ஹீ..

Monday, September 6, 2010

பலே பாண்டியா - திரை விமர்சனம் BALE PANDIYA - MOVIE REVIEW


விளமபரங்கள பார்த்து படம் பார்க்க போய் நான் ஏமாந்த படங்கள்ல இதுவும் ஒன்னு.
கதைய பத்தி நான் பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. கதை என்னனு கிளைமாக்ஸ் அப்புறம் கூட என்னால கண்டுபிடிக்க முடில.

ஆனா ஒன்னு டைட்டில் ரொம்ப நல்ல இருக்கும், அதுக்கு அப்புறம் மறுபடியும் கிளைமாக்ஸ்ல ஒரு டைட்டில் போடுறாங்க அதுவும் ரொம்ப நல்ல இருக்கும். இயக்குனர் ஒரு விளம்பர பட இயக்குனர் என்பது அந்த ரெண்டு விசயத்துல தான் கொஞ்சம் தெரியும். திரைக்கதை என்பதை துளியும் கூட யோசிக்காம நாம என்ன எடுத்தாலும் ரசிப்பாங்க, அப்படீன்னு ஒரு தைரியத்துல எடுத்த படம். சாரி இயக்குனர் நீங்க தப்பு கணக்கு போட்டுடீங்க.
நீங்க சீரியஸா கதைய கொண்டு போறீங்கள, இல்லை காமடிய கொண்டு போறீங்கள என்பது எங்களுக்கு கடைசி வரைக்கும் புரியல.
படத்துல ரெண்டு விஷயம் ஆறுதலா அமஞ்சு இருக்கு.
ஒன்னு ஒளிப்பதிவு, நிச்சயம் ஒளி இயக்குனர பாராட்டியே ஆகணும். சில இடங்களில் சென்னை என்பதையே மறந்து, எதோ வெளிநாடு போல இருக்கு' என்று நம்மள நினைக்க தோணும். பாண்டிச்சேரில எடுத்த காட்சிகளும், பாடலும் அற்புதம்.
செம்மொழி பாடல் எபக்ட்ல எல்லா பாடகர்களும் சேர்ந்து ஒரு பாட்ல வராங்க. இந்த படத்துக்கு தேவை இல்லாதது. வேறு ஏதாவது விளம்பரகளுக்கு இந்த பாடலை யூஸ் பண்ணி இருக்கலாம்.
படத்துல ரெண்டாவது நல்ல விஷயம் விவேக், ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்மள நிறைய இடத்துல சிரிக்க வைக்கிறார். கூடவே கருத்துகளையும் சொல்கிறார் நகைச்சுவையாக.
எனக்கு ரொம்ப பிடித்த வசனம், "ரேசன் கடைல அரிசி ஒரு ரூபாய்க்கு போடுறாங்க, ஆனா வெளிய போறதுக்கு ரெண்டு ரூபாயா???" இந்த சீன்ல தியேட்டர் மொத்தமும் கொள்!
ஹீரோ விஸ்ணு: சாரி பாஸ் அடுத்த படத்துல பாக்கலாம்.
ஹீரோயின் பீயா, இவங்களுக்கு கொடுத்த வேலைய கரக்டா பண்ணி இருக்காங்க. அதுக்கு ஒரு சபாஷ். என்ன கொஞ்சம் அந்த முடிய கொஞ்ச முடிஞ்சு இருக்கலாம். படம் பூரா ஏதோ சேமியாவ தலைல தொங்க விட்ட மாறி பப்பரப்பென்னு இருக்கு.
ஜெயப்ரகாஷ்: ஒரு நல்ல நடிகரை சுத்தமா வேஸ்ட் பண்ணி இருக்காங்க.
இசை தேவன்: ப்ளீஸ் பாஸ், மீண்டும் நீங்க பாட போயிருங்க. பாடல்கள் கூட பரவாயில்லை. பின்னணி இசை இரைச்சல்.


மொத்தத்தில் பலே பாண்டிய.. மொக்க பாண்டியா..